கலிவிருத்தம் 2617. | 'வல்லை வரம்பு இல்லாத மாய வினைதன்னால் மயங்கினரோடு எய்தி, மதி மயங்கி, மேல்நாள், "அல்லை இறையவன் நீ ஆதி" என, பேதுற்று அலமருவேம்; முன்னை அறப் பயன் உண்டாக, "எல்லை வலயங்கள் நின்னுழை" என்று, அந் நாள் எரியோனைத் தீண்டி, எழுவர் என நின்ற தொல்லை முதல் முனிவர், சூளுற்ற போதே, தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ?-எந்தாய்!' |
எந்தாய் - எங்கள் தந்தையே! மேல்நாள் வல்லை வரம்பு இல்லாத மாய வினை தன்னால் - முன்காலத்தில் வலிமை வாய்ந்த எல்லை இல்லாத மாயையின் சூழ்ச்சியால்; மயங்கினரோடு எய்திமதிமயங்கி - அறிவு மயக்க முற்றவரோடு சேர்ந்து அறிவு திரிந்து; இறைவன் நீ அல்லை -பரம்பொருளாகிய கடவுள் நீ அன்று என்றும்; ஆதி என - நீயே கடவுள் என்றும்; பேதுற்று அலமருவேம் - தடுமாறி வருந்தும் எங்களுடைய; முன்னை அறப்பயன் உண்டாக - முற்பிறவியில் செய்த நல்வினையின் பயன் ஏற்பட; அந்நாள் எல்லை வலயங்கள் நின்னுழை என்று - அக்காலத்து எல்லையாக உள்ள உலகங்கள் உன்னிடத்துத் தங்கியுள்ளன என்று; எழுவர் என நின்ற தொல்லை முதல் முனிவர் - எழுவராய் நிலைபெற்ற பண்டை முனிவர்கள்; எரியோனைத் தீண்டிச் சூளுற்றபோது - அக்கினியைத் தீண்டிச் சபதம் செய்த போது; தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ- யார்பரம் பொருள் என அறியாது திரண்டு நின்றஎங்கள் சந்தேகத்தையும் நீ அழித்தாய் அல்லவோ?; ஏ - அசை. மாய வினை - இராசச, தாமசக் குணங்களால் ஏற்படும் தீவினைகள். எரியோன் என்பதற்குத்தழல் நிறங்கொண்ட சிவன் என்பர் சிலர். ஏழு முனிவர்: அத்திரி, பிருகு, குப்சர், வசிட்டர்,கௌதமர், காசிபர், ஆங்கிரசர் ஆவர். சூளுற்றது; திருமாலே பரம் பொருள் என்றது, இவ்வரலாறுபற்றிய செய்திகள் புலப்படவில்லை இது பற்றிப் பலவாறு உரைப்பாரும் உளர். வலயம் - குவலயம்என்ற சொல்லின் முதல்குறையும் ஆம் என்பர். 31 |