இராமன் முதலியோர் சரபங்கன் குடிலில் தங்குதல்

2619.போனவன் அக நிலை
     புலமையின் உணர்வான்
வானவர் தலைவனை வரவு
     எதிர் கொண்டான்;
ஆனவன் அடி தொழ, அருள்
     வர, அழுதான்
தானுடை இட வகை
     தழுவினன், நுழைவான்.

    போனவன் அகநிலை புலமையின் உணர்வான் - போன
இந்திரனின் மனநிலையை ஞானக் கண்ணால் சரபங்கர் அறிபவராகி; வானவர்
தலைவனை வரவுஎதிர் கொண்டான்-
தேவர்களின் தேவனாம் இராமனை
வரவேற்றான்; ஆனவன் - அப்படி வந்த இராமனும்; அடி தொழ -
முனிவனின்அடிவணங்க; அருள் வர அழுதான் - அன்பு பெருகக்
கண்ணீர் சிந்தினான்; தானுடை இடவகைதழுவினன் நுழை வான் -
தானிருக்கும் குடிலிடத்து இராமனைத் தழுவிக் கொண்டு உட்புகுவார்.

     புலமை - அறிவு, ஞானம். அருள் - இலக்கணையாய் அன்பிற்காயிற்று
இட வகை - இருப்பிடம்,வீடு தானுடை இடவகை தழுவினன் நுழைவான்
என்பதற்குத் தன்னடியார் இருப்பிடமே தன் வைகுந்தம் எனக்கருதும்
இராமன் நுழைந்தான் என்பர். அழுகை உவகைக் கலுழ்ச்சி.            33