2621. | அவ் வயின், அழகனும் வைகினன்- அறிஞன் செவ்விய அற உரை செவிவயின் உதவ, நவ்வியின் விழியவளொடு, நனி இருளைக் கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின். |
அவ்வயின் - அவ்விடத்தில், அறிஞன் செவ்விய அறஉரை செவி வயின் உதவ -சரபங்கர் நல்ல அறமொழிகளைக் காதிலே கூற(க் கேட்டு); அழகனும் நவ்வியின்விழியவளொடு - இராமனும் பெண்மானின் விழி போன்ற கண்களையுடைய சீதையோடு; நனிஇருளைக் கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின் வைகினன் - இருட்டை மிகுதியும் பற்றிய இரவுப் பொழுது ஒரு முடிவை அடையும் அளவு தங்கினான். இரவு முழுவதும் அறவுரை கேட்டுக் கொண்டிருந்தனர் என்றும் கூறுவர். இராமனை அழகன் எனக்குறிப்பதை அழகனும் அவளும் துஞ்ச '(2344) அதிகம் நின்று ஒளிரும் இவ் அழகன் முகம் (2748)என்ற தொடர்களில் காணலாம். சீதையைக் கூறியது இலக்குவனுக்குஉபலட்சணம். 35 |