2622. | விலகிடு நிழலினன், வெயில் விரி அயில் வாள் இலகிடு சுடரவன், இசையன திசை தோய், அலகிடல் அரிய, தன் அவிர் கர நிரையால், உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான். |
விலகிடு நிழலினன் - வீசுகின்ற ஒளியுடையவனும்; இலகிடு சுடரவன் - விளங்குகின்ற சுடர் உடையவனும் ஆன சூரியன்;இசையன திசை தோய் - தன்புகழ் போல் நான்கு திசைகளிலும் சென்று படிந்த; அலகிடல்அரிய - கணக்கிட்டுக் கூற முடியாத; வெயில் விரி அயில் வாள் - வெயில் விரிந்தகூரிய வாள்கள் போன்ற; தன் அவிர்கர நிரையால் - தன்னுடைய விளங்கும் கதிர்களாம்கைகளின் கூட்டத்தால்; உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் - உலகங்களை மூடிய நிறைந்த இருட்டாகிய போர்வையைக் கழற்றுவான். நிழல் இனன் எனப் பிரித்து ஒளியுடைய சூரியன் எனலுமாம். சூரியன் தன் கதிர்களால் இருள்நீங்கத் தோன்றியதை உருவகமாக்கியுள்ளார். உலகை மூடிய இருளைப் போக்குவது வெயில், அதனைப்பரப்புதற்குக் கதிர் ஆகியவற்றை முறையே உறையும் வாளும் கையுமாகப் படைத்துள்ளார். இசையனஎன்பதற்கு ஒன்றோடொன்று இணங்கி நிற்பன எனவும் உரைப்பர். கரம் - சிலேடைஉருவகம். 36 |