சரபங்கர் தீப் புக்கு வீடு பெறல்

2623.ஆயிடை, அறிஞனும், அவன்
எதிர் அழுவத்
தீயிடை நுழைவது ஓர்
தெளிவினை உடையான்,
'நீ விடை தருக' என
     நிறுவினன், நெறியால்,
காய் எரி வரன் முறை
     கடிதினில் இடுவான்.

    ஆயிடை - அப்பொழுது; அறிஞனும் அவன் எதிர் - சரபங்க
முனிவரும் இராமன் எதிரில்; அழுவத்தீயிடை நுழைவது ஓர் தெளிவினை
உடையான் -
மிகுந்த நெருப்பில் புகுந்து உயிர் விடுவதான ஒருதெளிந்த
அறிவினை மேற்கொண்டவராய்; காய் எரி வரன் முறை நெறியால்
கடிதினில் இடுவான் -
எரியும் தீயை சாத்திர முறைப்படி விரைவில்
வளர்ப்பார் ஆகி; நீ விடை தருக எனநிறுவினன் - நீ எனக்கு விடை
தருவாயாக எனக் கேட்டார்.

     அழுவத்தீ அங்கிருந்த காட்டுத் தீ எனலுமாம் பரந்த ஒமகுண்டத்திலே
என்பாருமுளர். இடுவான்என்பதை எச்சமாக்கி இடுவதற்கு விடை தருக
எனவும் கூறலாம்.                                             37