2624. | வரி சிலை உழவனும், மறை உழவனை, 'நீ புரி தொழில் எனை? அது புகலுதி' எனலும், 'திருமகள் தலைவ! செய் திருவினை உற, யான் எரி புக நினைகுவென்; அருள்' என, இறைவன்: |
வரிசிலை உழவனும் -கட்டமைந்த வில்லில் வல்ல இராமனும்; மறை உழவனை - வேதம் வல்ல சரபங்கரை நோக்கி;நீபுரி தொழில் எனை அது புகலுதி எனலும் - நீ செய்ய விரும்பிய செய்கை என்ன? அதனைக் கூறுவாயாக எனக் கேட்டதும்; திருமகள் தலைவ செய் திருவினை உற - இலக்குமி கணவனே,செம்மையான மோட்சத்தை அடையும்படி; யான் எரிபுக நினைகுவென் அருள் என - நான் தீயில்புக எண்ணினேன், நீ விடை அருள்க என்று வேண்டவும்; இறைவன் - இராமன். சிலை உழவன், மறை உழவன் என்பன முன்னர் வாளுழவன் என்ற தொடர் (1371) வந்ததுபோன்றது. குறளில் வில்லேர் உழவர், சொல்லேர் உழவர் என்பவையும் காண்க. (குறள் 872).செய் இருவினை எனப் பிரித்து முன் செய்த நல்வினை தீவினை எனவும் கூறுவர். அவை அறின்மோட்சம் கிடைக்கும் என்பதாம். 38 |