2626. | 'ஆயிர முகம் உள தவம் அயர்குவென், யான்; "நீ இவண் வருகுதி" எனும் நினைவு உடையேன்; போயின இரு வினை; புகலுறு விதியால் மேயினை; இனி ஒரு வினை இலை;-விறலோய்! |
விறலோய் - வெற்றி வீரனே!; யான் ஆயிரமுகம் உளதவம் அயர்கு வென் - நான் பலவகைப்பட்டதவங்களைச் செய்பவன்; நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன் - நீ இவ்விடத்தில்எழுந்தருள்வாய் என்னும் நினைவு மேற் கொண்டுள்ளேன்; புகலுறு விதியால் போயின இருவினை - நேரிடும் முறைப்படி இரண்டு வினைகளும் அழிந்தன; மேயினை - அதன் பயனாய் நீ இங்குஎனக்கு அருள்புரிய வந்தாய்; இனி ஒரு வினை இலை - இனிமேல் நான் செய்யத்தக்க செயல்வேறு இல்லை. ஆயிரம் உகம் என ஆயிரக்கணக்கான யுகங்கள் என்பாருமுளர். புகலுறு விதி - சிறப்பித்துக்கூறும் விதியுமாம். தவம் செய்து இறைவன் அருள் பெறுவர் வேறு செய்யதக்க வினை இல்லை என்றஉண்மையை இது விளக்கும். 40 |