2627.'இந்திரன் அருளினன் இறுதி
     செய் பகலா
வந்தனன், "மருவுதி மலர்
     அயன் உலகம்;
தந்தனென்" என, 'அது
     சாரலென்,-உரவோய்!-
அந்தம் இல் உயர் பதம்
     அடைதலை முயல்வேன்.

    உரவோய் -வலிமை கொண்டவனே!; இந்திரன் வந்தனன் -
இந்திரன் இங்கு வந்தான்; இறுதி செய்பகலா - அழிகின்ற காலம் வரை;
மலர் அயன் உலகம் தந்தனென் - பிரமனின்சத்தியலோகத்தை
(உனக்குத்) கொடுத்தேன்; மருவுதி என அருளினன் - தங்குவாயாக என்று
சொன்னான்; அது சாரலென் - அதை நான் சேர விரும்பவில்லை; அந்தம்
இல் உயர்பதம்அடைதலை முயல்வேன் -
அழிவு இல்லாத உயர்ந்த
பரமபதத்தைச் சேர்வதற்கு முயற்சி செய்வேன்.

     'பிரமதேவன் அழைத்தான். உலகம் அழியும் அளவு சத்திய உலகில்
தங்குக' என இந்திரன்பிரமனின் வேண்டுகோளைத் தெரிவித்தும் சரபங்கர்
பரமபதம் அடைய முயல்வதாக அவனளித்த பேற்றைமறுத்து விட்ட கருத்து
புலப்படும். இதனால் அவர் பரமபதத்தையே மேலாகக் கொண்டமை
உணரப்பெறும்.இறுதி செய் பகலா - நேற்று மாலைப் பொழுது
என்பாருமுளர். உரம் -அறிவுமாம்.                               41