இராமன் முதலியோர் சரபங்கர் குடிலிலிருந்து போதல் கலிவிருத்தம் |     2631. |     அனையவன் இறுதியின்      அமைவுநோக்கலின்,     இனியவர், இன்னலின்      இரங்கும் நெஞ்சினர்,     குனி வரு திண் சிலைக்      குமரர், கொம்பொடும்,     புனிதனது உறையுள்நின்று      அரிதின் போயினார். |  
     இனியவர் குனிவரு திண் சிலைக்குமரர் - எல்லோர்க்கும்     இனிமையை அளிப்பவர்களும் வளைந்த வலிய வில்லையுடையவர்களுமான     இராமலக்குவர்;அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின் - அந்தச்     சரபங்க முனிவரின் முடிவின் நிலையைப்பார்த்தமையால்; இன்னலின்     இரங்கும் நெஞ்சினர் - துன்பத்தால் வருந்தியமனமுடையவர்களாய்;     கொம்பொடும் - பூங்கொம்பு போன்ற சீதையுடன்; புனிதனது உறையுள்     நின்று அரிதின் போயினார் - தூயவராம் அம்முனிவரின்     தவச்சாலையிலிருந்து துன்பத்தோடுநடந்து சென்றனர்.      சரபங்கர் தீயில் புக்கு நல்லுலகம் அடைந்ததைப் பார்த்து இராமன்     முதலியோர்வியப்பெய்தினர் என்பர் வால்மீகி. இங்குக் கம்பர் அந்நிலையைத்     துன்பச் சூழலாகக்காட்டுகிறார். தீப்புகு காட்சி, யாவர் மனத்தையும் கலங்கச்     செய்வதாம். உறையுள் -இருப்பிடம், அரிதிற் போயினார் - அம்முனிவரின்     பிரிவால் வருந்திச் சென்றனர் எனலுமாம்.கொம்பு - உவமையாகுபெயர்.   1  |