இராமன் தண்டக வனத்திற்கு வர, முனிவர்கள் மகிழ்தல்

2633.பண்டைய அயன்
     தரு பாலகில்லரும்,
முண்டரும், மோனரும்,
     முதலினோர்கள் அத்
தண்டக வனத்து உறை
     தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனை,
     களிக்கும் சிந்தையார்.

    பண்டைய அயன் தரு பால கில்லரும் - முதன் முதலில் தோன்றிய
பழமையான பிரமதேவன் பெற்றவர்களாகிய பாலகில்லரும்; முண்டரும் -
மழித்த தலையை உடையவர்களும்; மோனரும் - மௌன விரதம்
பூண்டவர்களும்; முதலினோர்கள் - முதலியவர்களாகிய; அத்தண்டக
வனத்துறை தவத்துளோர் எலாம் -
அந்தத் தண்டகாரணியம் எனும்
காட்டில் வாழ்கின்ற முனிவர்கள் எல்லாம்; இராமனைக்கண்டனர்
களிக்கும் சிந்தையார் -
இராமனைப் பார்த்தவர்களாய் மகிழும்
மனமுடையவர் ஆனார்கள்.

     பாலகில்லர் - வாலகில்யர் பிரமனது மயிரிலிருந்து தோன்றியவர்கள்;
அவனுடைய மாசனபுத்திரர்கள்; இவர்கள் அறுபதினாயிரவர் என்பர்;
பெருந்தவம் புரிந்தவர்கள்; இவர்கள் கட்டைவிரல் அளவுள்ள குறுவடிவினர்;
நாளும் கதிரவனின் இரதத்தை வலம் வந்து கொண்டிருப்பவர். மோனர்-
மௌனர் என்பதன் போலி. களிக்கும் சிந்தையார் கண்டனர் எனவும்
பொருள் முடிவுகொள்வர்.                                       3