2634. | கனல் வரு கடுஞ் சினத்து அரக்கர் காய, ஓர் வினை பிறிது இன்மையின், வெதும்பு கின்றனர்; அனல் வரு கானகத்து, அமுது அளாவிய புனல் வர, உயிர் வரும் உலவை போல்கின்றார். |
கனல் வரு கடுஞ்சினத்து அரக்கர் காய -தீப்போல் ஒளிவிடும் மிக்க கோபத்தையுடைய இராக்கதர்கள் வருத்துவதால்; ஓர் வினை பிறிது இன்மையின் - (அவர்களை அழிக்கும்) தக்க செயல் வேறு ஒன்றும் இல்லாமையால்; வெதும்புகின்றனர் - வாடும் அம்முனிவர்கள்; (இராமனின் வரவால்) அனல் வரு கானகத்து -தீப்பற்றி எரியும் காட்டில்; அமுது அளாவிய புனல்வர - தேவரமுதத்தோடு கலந்தநீர்ப் பெருக்கு வருவதால்; உயிர் வரும் உலவை போல்கின்றார் - அழியாது பிழைத்துத்தளிர்க்கும் உலர்ந்த மரங்களை ஒத்தவராகின்றார்கள். தண்டகாரணியத்து முனிவர்களுக்குக் காட்டிலுள்ள உலர்ந்த மரங்களும், அரக்கர்களுக்குநெருப்பும், அவர்களுடைய சினத்திற்குக் கோபத்தின் வெப்பமும், இராமனின் வருகைக்குக்குளிர்ந்த நீர்ப்பெருக்கின் வரவும் முனிவர் மகிழ்ந்தமைக்கு உலர்ந்த மரங்கள் தளிர்த்துச்செழித்தலும் உவமையாம். காப்பியத்தில் இத்தகைய அடுக்குவமைகள் அதன் அழகைப் பெருக்க உதவும். திருமால் மோகினி வடிவில் தேவர்க்கு அமுதம் அளித்தது போல இராமனின் வரவே அமுதளாவிய புனல்வரவாகக் கூறப்பெற்றுள்ளது. 4 |