2635.ஆய் வரும் பெரு வலி
     அரக்கர் நாமமே
வாய் வெரீஇ அலமரும்
     மறுக்கம் நீங்கினார்;
தீ வரு வனத்திடை இட்டுத்
     தீர்ந்தது ஓர்
தாய் வர, நோக்கிய
     கன்றின் தன்மையார்.

    ஆய்வரும் பெருவலி அரக்கர் நாமமே - மேன் மேலாய் மிக்கு
வளரும் பெரிய வலிமையுடைய இராக்கதர்களின் பெயரையே; வாய்வெரீஇ
அலமரும் மறுக்கம் நீங்கினார் -
வாயால் சொல்லவும் அஞ்சி வருந்தும்
மனக்குழப்பத்தைநீங்கினவர்களாகிய அம் முனிவர்கள்; தீ வருவனத்திடை-
நெருப்புப் பற்றி எரியும்காட்டில்; இட்டுத் தீர்ந்தது ஓர் தாய் வர- விட்டு
நீங்கிய ஒப்பற்ற தாய்ப்பசுமீண்டு வர; நோக்கிய கன்றின் தன்மையார் -
அதனைக் கண்ட இளங்கன்றின்நிலைமையையுடையவரானார்கள்.

     தீ வரு வனம் அரக்கர்களுக்கும், கன்று முனிவர்களுக்கும், தாய்ப்பசு
இராமனுக்கும் உவமைகள்.'ஆடவர் எல்லாம் தாயை முன்னிய கன்று என
நின்று உயிர் தளிர்ப்ப' (1370) எனத் தயரதன்இருந்த இடத்திற்குச் சென்ற
இராமனைக் கண்ட மக்கள் கொண்ட உணர்வுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
அலமருதல் - திகைத்து வருந்துதல். மறுக்கம் - தத்தளிப்பு.             5