2636.கரக்க அருங் கடுந் தொழில்
     அரக்கர் காய்தலின்,
பொரற்கு இடம் இன்மையின்
     புழுங்கிச் சோருநர்,
அரக்கர் என் கடலிடை
     ஆழ்கின்றார், ஒரு
மரக்கலம் பெற்றென,
     மறுக்கம் நீங்கினார்.

    கரக்க அரும் கடுந் தொழில் அரக்கர் காய்தலின்- மறைப்பதின்றிச்
செய்யும் கொடிய செய்கைகளை உடைய இராக்கதர்கள் பகையால்
வருத்துவதால்; பொரற்கு இடம் இன்மையின் - போராடுவதற்குத் தமக்கு
இடம் இல்லாமையால்; புழுங்கிச்சோருநர் - மனம் நொந்து
சோர்வடைந்தவர்களும்; அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார்-
இராக்கதர் என்னும் கடலிடை விழுந்து மூழ்குகின்றவர்களும் ஆன
அம்முனிவர்கள்; ஒருமரக்கலம் பெற்றென - ஒரு கப்பலைப்
பெற்றாற்போல; மறுக்கம் நீங்கினார் - (இராமனைக் கண்டதும்) மனக்
கலக்கம் நீங்கப் பெற்றனர்.

     அரக்கர் யாரிடமும் அஞ்சார் ஆதலால் கரக்கருந் கடுந் தொழில்
அரக்கர் எனப்பட்டனர்.கடலிடை மூழ்க இருந்தவர்க்குத் தப்பிப் பிழைக்கக்
கப்பல் ஒன்று கிடைத்தது போல் அரக்கரால்துன்புற்ற முனிவர்களுக்கு
இராமன் உதவி புரிய வந்தனன். அரக்கர் - கடல், முனிவர் - கடலில்
ஆழ்வோர், இராமன் - மரக்கலம் என உருவகம் செய்துள்ளார். போர்புரிய
முனிவர்க்குத் தவநிலைஇடம் தராது.                               6