2638.வேண்டின வேண்டினர்க்கு
     அளிக்கும் மெய்த்தவம்
பூண்டுளர் ஆயினும்,
     பொறையின் ஆற்றலால்,
மூண்டு எழு வெகுளியை
     முதலின் நீக்கினார்;
ஆண்டு உறை அரக்கரால்
     அலைப்புண்டார் அரோ

    வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த் தவம் பூண்டுளர்
ஆயினும் -
விரும்பிச் செய்தவர்க்கு அவர்கள் விரும்பியவற்றை விரும்பிய
வண்ணமே தரும் நற்றவம்மேற்கொண்டுள்ளவர் ஆனாலும்; பொறையின்
ஆற்றலால் -
பொறுமை என்னும் வலிமையால்; மூண்டு எழு வெகுளியை
முதலின் நீக்கினார் -
மேன்மேல்மிக்கு வரும் சினத்தை வேரொடு
களைந்தார்கள். (ஆதலால்); ஆண்டுஉறை அரக்கரால்அலைப்புண்டார்-
அக்காட்டில் தங்கியிருந்து இராக்கதர்களால் வருத்தமுற்றார். அரோ-அசை.

     இதனால் நிறை மொழி மாந்தராம் அம்முனிவர்கள் தம் தவ
வலிமையால் அவ்வரக்கரைச்சினந்து சபித்து அழிக்காதிருத்தற்குக் காரணம்
கூறப்பெற்றது. கூடா ஒழுக்கமாகியபொய்த்தவத்திலிருந்து நீக்குதற்கு
'மெய்த்தவம்' என்றார். தவத்தின் பயன் எய்த முதலில்சினத்தை நீக்கிப் பின்
பொறுமையைப் பெற வேண்டும் என்பதாம். பொறை - காரணம் பற்றியோ,
மடமை பற்றியோ ஒருவன் தமக்கு மிகை செய்த போது தாம் அதனை அவன்
இடத்துச் செய்யாதுபொறுத்தல் ஆகும். தவத்தின் ஆற்றல் வேண்டிய
வேண்டியாங்குஎய்தலாம்.                                        8