2640. | இனியது ஓர் சாலை கொண்டு ஏகி, 'இவ் வயின் நனி உறை' என்று, அவற்கு அமைய நல்கி, தாம் தனி இடம் சார்ந்தனர்; தங்கி, மாதவர் அனைவரும் எய்தினர், அல்லல் சொல்லுவான் |
அனைவரும் இனியது ஓர் சாலை கொண்டு ஏகி - அம்முனிவர்கள் எல்லாரும் வசித்தற்கு இனிதாகிய ஒரு பன்னசாலைக்கு இராமன் முதலியோரை அழைத்துச் சென்று; 'இவ்வயின் நனி உறை' என்று - இவ்விடத்தில் நன்றாகத்தங்கியிருப்பீராக என்று சொல்லி; அவற்கு அமைய நல்கி - இராமனுக்கு ஏற்றவற்றைப்பொருந்தும்படி அளித்து; தாம் தனி இடம் சார்ந்தனர் தங்கி மாதவர் - தாம் தத்தம்தனி இடங்களை அடைந்து தங்கியிருந்து அதன் பின் அந்த முனிவர்கள்; அல்லல் சொல்லுவான் எய்தினர் - அரக்கரால் தாம்படும் துன்பங்களைக் கூற (இராமனிடம்) வந்தார்கள். இராமனின் உள்ளத்தில் தங்கள் துன்பத்தை உய்த்துணரும் வகையில் அனைவரும் துன்புற்றவரேஎன அறிவிக்க எய்தினர். நனி உறை என்பதற்குப் பல நாள் தங்குக எனவுமாம். அமையம் நல்கிஎனக் கொண்டு இருப்பிடம் தந்து இளைப்பாறப் பொழுதும் அளித்து எனவும் கொள்ளலாம். அமையம் - ஆறுதல் எனவுமாம். (குறள். 1178) 10 |