2641.எய்திய முனிவரை இறைஞ்சி,
     ஏத்து உவந்து,
ஐயனும் இருந்தனன்; 'அருள்
     என்? என்றலும்,
'வையகம் காவலன் மதலை!
     வந்தது ஓர்
வெய்ய வெங் கொடுந் தொழில் விளைவு
     கேள்' எனா,

    ஐயனும் எய்திய முனிவரை இறைஞ்சி - இராமனும் தன்னிடம் வந்த
அம்முனிவர்களை வணங்கி; ஏத்துஉவந்து இருந்தனன் - அவர்களை
அன்புடன் துதித்து இருந்தவன் ஆகி; அருள் என் என்றலும் - இப்போது
நீங்கள் எனக்குஎன்ன கட்டளை இடுகிறீர்கள் என்று கேட்டதும்; வையகம்
காவலன் மதலை! -
உலகங்களைக் காத்தலில் வல்லவனாம் தயரதனின்
மகனே!; வந்தது ஓர் வெய்ய வெங்கொடுந்தொழில் விளைவு கேள்
எனா -
எங்களுக்கு நேரிட்டதாகிய ஒரு மிகவும் அதிககொடுமையான
செய்கைகளின் பெருக்கத்தை நீ கேட்டருள் என்று.

     ஏத்து உவந்து என்பதற்கு அம் முனிவர்கள் செய்த துதிகளுக்கு மனம்
மகிழ்ந்து என்றும்கொள்வர். வையகம் காவலன் மதலை என்றதால்
தந்தையின் கடமை மகனுக்கும் உண்டு என்பது குறிப்பு.வெய்ய வெங்
கொடு - ஒரு பொருட் பன்மொழிகள். மனத்தாலும் மொழியாலும் உடலாலும்
கொடுமைக்குட்பட்டனர் என்பதைக் குறிக்க மும்முறை கூறினார் எனலுமாம். 11