2643.'வல்லியம் பல திரி வனத்து
     மான் என,
எல்லியும் பகலும், நொந்து
     இரங்கி ஆற்றலெம்;
சொல்லிய அற நெறித்
     துறையும் நீங்கினெம்;
வில் இயல் மொய்ம்பினாய்!
     வீடு காண்டுமோ?

    வில்லியல் மொய்ம்பினாய் - வில்வித்தையில் வலிமையுடையவனே!:
வல்லியம் பலதிரி வனத்து மான் என - பல புலிகள்சஞ்சரிக்கும்
காட்டிலுள்ள மான்களைப் போல; எல்லியும் பகலும் நொந்து இரங்கி
ஆற்றலெம் -
இரவும் பகலும் மனம் நொந்து வருந்தி (அவ்வரக்கர் செய்யும்
கொடுமைகளைப்) பொறுக்கமாட்டாதவர் ஆகி; சொல்லிய அறநெறித்
துறையும் நீங்கினெம் -
நூல் கூறிய தருமவழிகளிலிருந்து விலகினவர்
ஆனோம்; வீடு காண்டுமோ? - இத்துன்பங்களிலிருந்து விடுதலை
அடைவோமா?

     விற்கருவி கூறினமையால் 'அரக்கர்களை அழித்து எங்களைக் காப்பாய்'
என்ற குறிப்புபுலப்படும். துன்ப மிகுதியைச் சுட்ட 'வீடு காண்டுமோ' என்றார்.
அறநெறியிலிருந்து வழுவியமையால்உயர்நிலை எவ்வாறு அடைவோம் என்று
கூறினார் என்பர். புலி அரக்கர்களுக்கும் மான்முனிவர்களுக்கும் உவமை. 13