2645. | 'இந்திரன் எனின், அவன் அரக்கர் ஏயின சிந்தையில், சென்னியில், கொள்ளும் செய்கையான்; எந்தை! மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார்? வந்தனை, யாம் செய்த தவத்தின் மாட்சியால், |
இந்திரன் எனின் - தேவேந்திரனோ என்றால்; அவன் அரக்கர் ஏயின - அவன் இராக்கதர்கள் கட்டளையிட்டவினைகளை; சிந்தையில் சென்னியில் கொள்ளும் செய்கையான் - மனத்திலும் சிரசிலும்ஏற்று நடக்கும் ஏவலனாக உள்ளான்; (ஆகையால்) எந்தை - எம் தலைவனே!; இடுக்கண்நீக்குவார் மற்ற யார் உளர் - (எங்கள்) துன்பங்களைப் போக்குவோர் (உன்னையன்றி) வேறுஎவர் இருக்கின்றனர்? (ஒருவரும் இல்லை) ; யாம் செய்த தவத்தின் மாட்சியால் வந்தனை -நாங்கள் முன்னர்ச் செய்த தவத்தின் பெருமையால் (எங்களைப் பாதுகாக்க இங்கு) வந்தருள்செய்தாய். இந்திரனைக் குறித்தது அவன் தேவர் தலைவன்; வேள்வியைக் காக்கும் கடமை உடையவன்;ஆயினும் அவன் அரக்கர்களுக்குப் பணி புரியும் நிலையில் இருப்பதால் 'இனி உன்னையன்றி எங்கட்குவேறு கதி இல்லை' என இராமனிடம் முனிவர்கள் கூறினர். சென்னியிற் கொள்ளுதல் ஒருவன் காலால் இட்ட பணியைத் தலையால் செய்யும் அடிமைநிலை. கங்கை காண் படலத்தில் குகன் பரதனைவினவியபோது 'தகவுடையோர் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்' (2334)என வரும் தொடருடன் ஒப்பிடற்பாலது. 15 |