2646. 'உருளுடை நேமியால்
     உலகை ஓம்பிய
பொருளுடை மன்னவன்
     புதல்வ! போக்கிலா
இருளுடை வைகலெம்;
     இரவி தோன்றினாய்;
அருளுடை வீர! நின் அபயம்
     யாம்' என்றார்.

    உருளுடை நேமியால் உலகை ஓம்பிய பொருளுடை மன்னவன்
புதல்வ -
எங்கும் சுற்றிச் செல்லும் ஆணைச் சக்கரத்தால் உலக
முழுவதையும் காத்த எல்லாச் செல்வங்களும்உடைய தயரதனுடைய மகனாம்
இராமனே!; அருளுடை வீர - கருணை உடைய வீரனே!; போக்கிலா
இருளுடை வைகலெம் -
நீங்குதலில்லாத துன்பமாம் இருள் கொண்ட
நாட்களை உடையவர்களாயிருக்கிறோம்; இரவி தோன்றினாய் - கதிரவன்
போல நீ வந்துஎழுந்தருளினாய்; நின் அபயம் யாம் என்றார் - உனக்கு
அடைக்கலம் யாம் என்றுஅம்முனிவர் கூறினர்;

     அரசன் ஆணையைச் சக்கரம் என்பது கவிமரபு. உலகை ஓம்பிய
மன்னவன் புதல்வ என்றதால்தந்தைக்கு உரிய பொறுப்பு மகனுக்கும் உண்டு
என்பதை உணர்த்தும். பொருள் என்பதற்கு உறுதிப்பொருள், செயல், புகழ்,
மெய்மை எனப் பலபொருள் காண்பர். துன்பத்தை இருளாகக் கூறல்
பண்டையமரபு. போக்கிலா இருள் விடியாத இருளாம். அரக்கரை
இருளாகவும் இராமனை இருள் நீக்கும்கதிரவனாகவும் கூறுவர். அருளுடை
வீர என்பதால் தீயோரை அழிப்பதற்கு வீரமும் தன்னைவிரும்பியவரைப்
பாதுகாப்பதற்கு அருளும் உடன் கூறப்பெற்றன. அபயம் - பயமற்ற நிலை.
தண்டகாரணிய முனிவர்கள் இராமனிடம் அடைக்கலம் புகுந்த நிலை
இதனால் நன்குவிளங்கும்.                                      16