இராமன் அபயம் அளித்தல்

2647. 'புகல் புகுந்திலரேல்,
     புறத்து அண்டத்தின்
அகல்வரேனும், என்
     அம்பொடு வீழ்வரால்;
தகவு இல் துன்பம் தவிருதிர்
     நீர்' எனா,
பகலவன் குல
     மைந்தன் பணிக்கின்றான்.

    பகலவன் குலமைந்தன் - சூரியன் குலத்துத் தோன்றிய இராமன்
(முனிவர்களை நோக்கி); புகல் புகுந்திலரேல் - அவ்வரக்கர்கள் (இனித்
துன்பம் செய்வதில்லை என்று கூறி) அடைக்கலம் அடையாமல்
போவாரானால்; புறத்து அண்டத்தின் அகல் வரேனும் - (இவ்வுலகை
விட்டு) அப்புறத்துள்ளவேறு அண்டங்களுக்கு ஓடிப் போவாரானாலும்; என்
அம்பொடு வீழ்வரால் -
நான் எய்த என்பாணத்தொடு கீழே வீழ்ந்து
மாய்வர் ஆதலால்; தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் - தகுதியில்லாத
இத்துன்பத்தை நீக்குங்கள் நீங்கள்; எனா - என்று சொல்லி;
பணிக்கின்றான் - (மேலும்) சொல்கின்றான்.

     பகலவன் - பகலைச் செய்கிறவனாகிய சூரியன், என் அம்பொடு வீழ்வர்
எனும் போது இராமன்தன் அம்பு அண்டங்களுக்கு அப்புறத்த
அண்டங்களுக்குச் சென்றாலும் அங்கும் சென்று அரக்கரைக்கொல்லும்
எனத் தன் ஆற்றலை எடுத்துரைத்தலும் ஆம். அம்பின் வீழ்ச்சி அரக்கர்
வீழ்ச்சிக்கும் காரணமாகும். இது செயலின் விரைவைக் காட்டும் அம்பொடு
என்பதிலமைந்த உருபுகருவிப் பொருளில் வந்தது. முனிவர்கள் வருத்தம்
உறுதல் என்பது தக்கது அன்று என்ற கருத்துபுலப்படத் தகவில் துன்பம்
என்றான். பணித்தல் - உறுதிகூறல்.                               17