2649.'அறம் தவா நெறி
     அந்தணர் தன்மையை
மறந்த புல்லர் வலி
     தொலையேன் எனின்,
இறந்துபோகினும் நன்று;
     இது அல்லது,
பிறந்து யான் பெறும்
     பேறு என்பது யாவதோ?

    அறம் தவா நெறி அந்தணர் தன்மையை - தருமத்திலிருந்து
நீங்காத முனிவர்களின் பெருமையை; மறந்த புல்லர் வலி தொலையேன்
எனின் -
மறந்து (உங்களுக்குக்) கேடு செய்கின்ற அற்பர்களாகிய
அரக்கர்களின் பலத்தை அழிக்காமற்போவேன் ஆனால்; இறந்து போகினும்
நன்று -
அவ்வரக்கர்களால் போரில்மரணமடைந்தாலும் நல்லதே; இது
அல்லது -
இந்த நல்ல செயலுக்குப் பயன்படுதல் அல்லாமல்;யான் பிறந்து
பெறும் பேறு என்பது யாவதோ -
நான் பிறந்ததனால் அடையும் நற்பயன்
என்பதுதான் எதுவோ? (ஒன்றுமில்லை).

     தவா - கெடாத என்றுமாம் நன்றிது - நன்று+இது. இது என்பது
அசைநிலை. இராமன் நல்லோரைக்காத்து அல்லோரை அழிக்க
அவதாரமெடுத்த உண்மையைக் குறிப்பாக உணர்த்தியது எனலாம்.      19