2650. | 'நிவந்த வேதியர் நீவிரும், தீயவர் கவந்த பந்தக் களிநடம் கண்டிட, அமைந்த வில்லும் அருங் கணைத் தூணியும் சுமந்த தோளும் பொறைத் துயர் தீருமால். |
நிவந்த வேதியர் நீவிரும் - பண்புகளால் உயர்ந்த தேவமோதும் அந்தணராம் நீங்களும்; தீயவர் கவந்த பந்தக் களிநடம்கண்டிட - கொடியோராம் அவ்வரக்கரின் தலையற்ற உடற்குறையின் கூட்டங்கள் மகிழ்ந்தாடும்கூத்தைக் கண்டு மகிழ; அமைந்த வில்லும் - கட்டமைந்த வில்லையும்; அருங்கணைத்தூணியும் - அரிய அம்புப் புட்டிலையும்; சுமந்த தோளும் பொறைத் துயர் தீரும் - இதுகாறும் தாங்கியிருந்த என் தோள்களும் சுமப்பதாகிய துன்பத்தைப் போக்குவதாகும். ஆல் -அசை. ஆயிரம் போர் வீரர் மடிந்த களத்தில் ஒரு கவந்தம் ஆடும் என்பர். இங்குக் கவந்தபந்தம் என்றமையால் பல கவந்தக் கூட்டம் ஆடும் வகையில் பல்லாயிரக்கணக்கான அரக்கர்களைக்கொல்வேன் என இராமன் உறுதி கூறினான். இதன் விளைவு கரதூடணப் போரிலும் இராம ராவணப்போரிலும் வெளிப்பட்டது. பொறைத்துயர் என்பது போர் செய்யாமல் வில்லையும் அம்பையும்வீணாகச் சுமக்கும் துன்பத்தைக் குறிக்கும். நீவிரும் என்ற உம்மையால் மற்றை யாவரையும் தழுவிநின்றது. இச்செய்யுளில் வகரமகரங்கள் எதுகை இனம் பற்றி வந்துள்ளன. 20 |