2652.'சூர் அறுத்தவனும்,
     சுடர் நேமியும்,
ஊர் அறுத்த
     ஒருவனும், ஓம்பினும்,
ஆர் அறத்தினொடு அன்றி
     நின்றார் அவர்
வேர் அறுப்பென்; வெருவன்மின்
     நீர்' என்றான்.

    சூர் அறுத்தவனும் - சூரபன்மனை வேல் கொண்டழித்த முருகக்
கடவுளும்; சுடர் நேமியும் - பகைவரை ஒளியோடு கூடியசக்கரத்தால்
அழிக்கும் திருமாலும்; ஊர் அறுத்த ஒருவனும் - திரிபுரர் ஊர்களை
எரித்தழித்த சிவபெருமானும்; ஓம்பினும் - துணையாக நின்று காத்தாலும்;
ஆர்அறத்தினொடு அன்றி நின்றார் - யார் தருமத்தொடு பொருந்தாமல்
பாவ வழிகளில்நின்றார்களோ; அவர் வேர் அறுப்பென் -
அக்கொடியவர்களை வேரோடு அழியச் செய்வேன்;நீர் வெருவன்மின்
என்றான் -
நீங்கள் அஞ்சாதீர்கள் என்று இராமன் உறுதிமொழிந்தான்.

     திரி மூர்த்திகளில் பிரமனை நீக்கிய காரணம் அவன் வேத நெறியில்
எப்போதும்இருப்பதால் போரிட வாரான் என்பது கருத்து. முருகனை
முதலில் கூறியது தேவ சேனாபதியாக அவன்விளங்குவதாம். அகநானூற்றில்
(59. 10. 11) சூர்மருங்கறுத்த சுடரிலை நெடுவேற் சினமிகு முருகன்எனக்
குறிக்கப் பெறுவான். இராமன் திருமாலின் அவதாரம் எனினும் மனிதனாக
அவதரித்தற்கேற்பத் திருமாலைச் 'சுடர்நேமி' எனப் பிறன் போலக் கூறினான்.
ஊர், பொதுப்பெயராயினும் இது முப்புரங்களைக் குறிக்கிறது.
அறத்தினோடன்றி நின்றார் என்பதால் அரக்கர்எனவும் பொருள் கொள்வர்
தண்டகாரண்ய முனிவர்க்கு அபயமளித்து ஆதரித்தது காப்பிய நோக்காம்
சரணாகதிக்குத்துணை செய்கிறது. சுடர்நேமி - வினைத் தொகைப் புறத்துப்
பிறந்த அன்மொழித்தொகை.                                    22