2653.உரைத்த வாசகம் கேட்டு
     உவந்து ஓங்கிட,
இரைத்த காதலர்,
     ஏகிய இன்னலர்,
திரித்த கோலினர்,
     தே மறை பாடினர்;
நிருத்தம் ஆடினர்;
     நின்று விளம்புவார்.

    உரைத்த வாசகம் கேட்டு - இவ்வாறு இராமன் கூறிய அபய
மொழிகளைக் (அம்முனிவர்கள்) கேட்டு; உவந்து ஓங்கிட - மகிழ்ச்சிப்
பெருக்கு மீதூர; இரைத்த காதலர் - பொங்கி எழுந்த அன்பினை
உடையவர்களும்; ஏகிய இன்னலர் - துன்பத்தை நீங்கியவர்களும்; திரித்த
கோலினர்-
(கையால்) சுழற்றிய தண்டங்களை உடையவர்களும்; தேமறை
பாடினர் -
தெய்வத்தன்மைவாய்ந்த வேதங்களைப் பாடினவர்களும்;
நிருத்தம் ஆடினர் - கூத்தாடினவர்களுமாகி; நின்று விளம்புவார் -
இராமன் முன்நின்று கூறுவார்கள்.

     இரைத்த - மேலோங்கி ஒலித்த என்றுமாம். ஏகிய இன்னலர் என்ற
தொடரை 'அருங்கேடன்'என்பது கோலக் கொள்க. இன்னல் ஏகியவர் எனப்
பிரித்துக் கூட்டுவாரும் உளர். கோல்திரித்தல், மறை பாடல், நிருத்தமாடல்
என்பவை பெருமகிழ்வு கொண்ட நிலையைக் காட்டும்'ஆடினர், பாடினர்,
அங்கும் இங்குமாய் ஓடினர்; உவகைமா நறவு உண்டு ஓர்கிலார்' (193) எனப்
பாலகாண்டத் திரு அவதாரப் படலவரி இந்நிலையைக் காட்டும். கோல்
முனிவர்க்குரிய திரிதண்டம்அல்லது ஏக தண்டம். தேமறை என்பது இனிய
வேதம்என்பர்.                                               23