2654. | 'தோன்றல்! நீ முனியின், புவனத் தொகை மூன்று போல்வன முப்பது கோடி வந்து ஏன்ற போதும், எதிர் அல; என்றலின் சான்றலோ, எம் தவப் பெரு ஞானமே'. |
தோன்றல் - தலைவனே!; நீ முனியின் - நீ கோபம் கொண்டால்; மூன்றுபோல்வன - இந்த மூன்று லோகங்களைப் போல்வனவாகிய; முப்பது கோடி புவனத் தொகை வந்து- முப்பது கோடி உலகங்களுடைய கூட்டங்கள் (ஒரே காலத்தில் ஒருங்கே சேர்ந்து) வந்து; ஏன்ற போதும் - எதிர்த்தாலும்; எதிர் அல என்றலின் - (உனக்கு) ஈடல்ல என்ற தன்மையில்; எம் தவப் பெரு ஞானமே சான்றலோ - எங்களுடைய மிகப் பெரிய தத்துவ ஞானமேசாட்சி அல்லவோ? (ஆம்). முப்பது கோடி என்றது ஒன்றுக்குக் கோடியாகப் பெருகி வருதல். எல்லையற்ற பெருக்கத்தைக்கோடி என்பது இலக்கிய வழக்கு. நீ போர் செய்யுமுன் பகைவர் மீது கொள்ளும் சீற்றமே அவர்கள்வேரோடு அழிய வகை செய்யும். கடவுளின் பேராற்றலைத் தவம் செய்து பெற்ற ஞானத்தாலே அறியஇயலும் என்பார். தவப்பெரு ஞானம் - ஐயம் திரிபில்லாத மிகப்பெருமைவாய்ந்த தத்துவ ஞானம்.புவனம் மூன்று - சுவர்க்கம். மண்ணுலகம், பாதாளம். தோன்றல் - அண்மை விளி. 24 |