2655.'அன்னது ஆகலின், ஏயின
     ஆண்டு எலாம்,
இன்னல் காத்து இங்கு இனிது
     உறைவாய்' எனச்
சொன்ன மா தவர் பாதம்
     தொழுது, உயர்
மன்னர் மன்னவன்
     மைந்தனும் வைகினான்.

    அன்னது ஆகலின் - (நின் பெருமை) அத்தகைய தாயிருத்தலால்;
ஏயின ஆண்டு எலாம் - (நீ காட்டில்இருக்குமாறு) அமைந்த ஆண்டுகள்
எல்லாம்; இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் - எங்களுக்குத்
துன்பம் வராமல் காத்து இந்தத் தவ வனத்தில் இனிது மகிழ்ந்து வாழ்வாயாக;
எனச் சொன்ன மாதவர் பாதம் தொழுது - என்று கூறிய பெருந்தவ
முனிவர்களின் அடிகளை வணங்கி;உயர் மன்னர் மன்னவன் மைந்தனும்
வைகினான் -
சிறந்த அரசர்க்கரசனாகிய தயரதசக்கரவர்த்தியின் மகனாம்
இராமனும் தங்கியிருந்தான்.

     ஏயின - சிற்றன்னை கைகேயி ஏவினை என்றுமாம். இன்னல் காத்து
என்பது துன்பம் வராமல்தடுத்தல். உயர் என்ற அடையை மன்னர்க்கும்,
மன்னவனுக்கும் மைந்தனுக்கும் கூட்டிப் பொருள்காணலாம். மைந்தனும்
என்று கூறியதால் சீதையும் இலக்குவனும் வைகினர் என்பது தானே
பெறப்பட்டது.                                                25