இராமன் பத்தாண்டுகள் தண்டக வனத்தில் தங்கியிருத்தல் 2656. | ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு, அவண், மைந்தர் தீது இலர் வைகினர்; மா தவர் சிந்தை எண்ணி, 'அகத்தியற் சேர்க' என, இந்து-நன்னுதல் தன்னொடும் ஏகினார். |
மைந்தர் - இராமலக்குவர்கள்; அவண் - அவ்விடத்தில்; ஐந்தும் ஐந்தும் ஆண்டு - பத்துஆண்டுகள்; தீது இலர் அமைதியின் வைகினர் - ஒரு துன்பமுமில்லாமல் மனநிறையுடன்தங்கியிருந்தனர்; மாதவர் சிந்தை எண்ணி - பெருந்தவத்தினராகிய அம்முனிவர்கள் மனத்தில் ஆலோசித்து; 'அகத்தியற் சேர்க' என - அகத்திய முனிவரைச் சேர் வீராகஎன்று சொல்ல; இந்து நன்னுதல் தன்னொடும் ஏகினார் - பிறை மதி போன்ற நல்லநெற்றியையுடைய சீதையுடன் புறப்பட்டனர். ஒவ்வொரு முனிவர்கள் ஆச்சிரமத்திலும் சிலசில திங்கள்கள் தங்கியிருக்கப்பத்தாண்டுகள் கழிந்தன. வான்மீகத்தில் ஆச்சிரமங்களில் முறையே 13, 12, 4, 5, 7, 1, 1/4,3/4, 3, 8 ஆகிய மாதங்கள் என்று பத்து ஆச்சிரமங்களில் ஐந்து ஆண்டுகளை ஒரு வட்டத்தில்கழித்துப் பின் அதேபடி இரண்டாம் வட்டத்தையும் கழித்தனன் எனக் காணப்பெறும். மைந்தர் -வலியோர் எனவும் ஆம். அகத்தியரிடமிருந்து இராவண வதத்திற்கு வில், அம்பு, அம்புப் புட்டில்முதலிய பெற வேண்டும் என இருத்தலின் சிந்தை எண்ணி அகத்தியற் சேர்க என்றனர். பத்து ஆண்டுக் காலச் செய்தியை ஒரே பாடலில் காட்டிக் காப்பியத்தில் கால விரைவுணர்த்தும் பாங்கைக் காணமுடிகிறது. இதுவரை உள்ள பாடல்கள் தண்ட காரண்யப் படலம் என்றும் இனி வருவன அகத்தியப் படலம்எனவும் சில சுவடிகளில் காணப் பெறும். 26 |