அகத்தியன் பால் செல்லும் இராமனைச் சுதீக்கணன் உபசரித்தல் 2657. | விடரகங்களும், வேய் செறி கானமும், படரும் சில் நெறி பைப்பய நீங்கினார்; சுடரும் மேனிச் சுதீக்கணன் என்னும் அவ் இடர் இலான் உறை சோலை சென்று, எய்தினார். |
விடரகங்களும் - மலை வெடிப்புள்ள பள்ளங்களிலும்; வேய் செறி கானமும் - மூங்கில்கள் அடர்ந்தகாடுகளிலும்; படரும் சில் நெறி பைப்பய நீங்கினார் - தொடர்ந்து செல்லும் சிறிய வழிகளை மெல்ல மெல்லக் கடந்து சென்று; சுடரும் மேனிசுதீக்கணன் என்னும் - ஒளி வீசும் மேனியை உடைய சுதீக்கணன் என்னும்; அவ் இடர்இலான்உறை சோலை சென்று எய்தினார் - துன்பங்களற்ற அந்த முனிவர் வாழும் தவச் சோலையைப்போய் அடைந்தனர். காட்டின் வழியை விடரகங்களும், வேய் செறி கானமும் படரும் சில் நெறி எனவும்விளக்கினார். சுதீக்கணன் - உக்கிரமான தவமுடைமையால் பெற்ற காரணப் பெயர். தவச் செறிவால்உடல் ஒளிமயமாயிருந்தது. தவத்தால் மெய்யுணர்வுற்று, இருவகைப் பற்றறவே பிறவித் துன்பம்நீங்கியதால் 'இடர் இலான்' என்றார். சுதீக்கணன், பைப்பய என்பனவிகாரங்கள். 27 |