2658. | அருக்கன் அன்ன முனிவனை அவ் வழி, செருக்கு இல் சிந்தையர், சேவடி தாழ்தலும், 'இருக்க ஈண்டு' என்று, இனியன கூறினான்; மருக் கொள் சோலையில் மைந்தரும் வைகினார். |
செருக்கு இல் சிந்தையர் - கருவமில்லாத மனத்தை உடைய இராமலக் குவர்கள்; அவ்வழி அருக்கன் அன்ன முனிவனை - அவ்விடத்தில் கதிரவன் போல் ஒளியுடைய சுதீக்கண முனிவரின்; சேவடி தாழ்தலும் - செம்மையான திருவடிகளைப் பணிந்து வணங்கவும்; ஈண்டு இருக்க என்று இனியன கூறினான் - 'இங்கு இருப்பீர்களாக' என்று இனிய சொற்களைக் கூறினான்; மைந்தரும் மருக்கொள்சோலையில் வைகினார் - இராமலக்குவர்களும் மணம் நிறைந்த அந்தத் தவச் சோலையில்தங்கினார்கள். அருக்கன் - பேரொளி பெற்றமைக்கும் அஞ்ஞான இருள் அகற்றுதற்கும் உவமை. முன்னர்ச்'சுடரும் மேனி' (2657) என்றதற் கேற்ப இங்கே அருக்கனை உவமை கூறினார். செருக்கு - யான் எனதுஎன்னும் மதம். 'யானென தென்னும் செருக்கு' (குறள். 346). இராமலக்குவர் தாம் சக்கரவர்த்திமைந்தர் என்ற செருக்கின்றிப் பணிவாக இன்மொழி பேசுபவர் எனப்பட்டனர். சரபங்கர் உரைப்படிஇராமன் முதலானோர் சுதீக்கணர் சாலையில் முதலில் ஒரு முறை தங்கிப் பின் பத்து ஆண்டுகள்வேறுவேறு ஆச்சிரமங்களில் தங்கி மீண்டும் ஒருமுறை இவரைக் கண்டார் என வான்மீகம்கூறும். 28 |