2659. வைகும் வைகலின்,
     மாதவன், மைந்தன்பால்
செய்கை யாவையும் செய்து,
     'இவண், செல்வ! நீ
எய்த யான் செய்தது
     எத் தவம்?' என்றனன்;
ஐயனும், அவற்கு
     அன்பினன் கூறுவான்.

    வைகும் வைகலின் - (அவ்வாறு) தங்கியிருக்கும் பொழுது;
மாதவன் -
பெருந்தவம் செய்த சுதீக்கணன்; மைந்தன் பால் -
இராமனிடத்தில்; செய்கை யாவையும் செய்து - செய்ய வேண்டிய
உபசாரங்கள் எல்லாவற்றையும் செய்து; 'செல்வ! இவண் நீ எய்த யான்
செய்தது எத்தவம்?'என்றனன் -
செல்வமுடையவனே! இங்கு நீ
எழுந்தருளும் படி நான் செய்தது எத்தகையதவமோ என்று சொன்னான்;
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் - இராமனும் அம்முனிவனுக்கு
அன்புடையவனாய்ச் சொல்லுவான்.

     வைகல் - வேளை என்றுமாம் செல்வன் - அரசச் செல்வமுடையவன்;
இம்மை மறுமை மோட்சச்செல்வங்களை அருள்பவன் என்றுமாம். தம்மிடம்
வந்தவரிடம் இன்மொழி பேசி மகிழ்வுறச்செய்தல் தலையாய செய்கையாம். 29