2660. | 'சொன்ன நான்முகன்தன் வழித் தோன்றினர் முன்னையோருள், உயர் தவம் முற்றினார் உன்னின் யார் உளர்? உன் அருள் எய்திய என்னின் யார் உளர், இற் பிறந்தார்?' என்றான். |
சொன்ன நான்முகன் தன்வழித் தோன்றினர் முன்னையோருள் - சிறப்பாகக் கூறப் பெற்ற பிரமனின் வமிசத்தில் பிறந்தவர்களாகிய முதன்மை பெற்ற பண்டையமுனிவர்களுள்; உயர்தவம் முற்றினார் உன்னின் யார் உளர் - சிறந்த தவத்தை முற்றச்செய்தவர் உன்னைப் போல வேறு எவர் இருக்கின்றனர்?; உன் அருள் எய்திய இற்பிறந்தார்என்னின் யார் உளர் என்றான் - உன் அருளை அடைந்த இல்வாழ்க்கையில் தோன்றினோர் என்னைப் போலப் பேறு பெற்றவர் வேறு எவர் உள்ளார் எனக் (இராமன்) கூறினான். சொன்ன - ஆன்றோர் யாவரும் புகழ்ந்து கூறிய என்றுமாம். நான்முகன் வழியில்தோன்றியவர் அந்தணர் ஆவர். உயர்தவம் முற்றினார் என்ற தொடர் 'சுதீக்கணன்' என்றபெயரினை (2657) விளக்கி நிற்கிறது. இற்பிறந்தார் - நற்குடியில் பிறந்து இல்லறத்திலேவாழ்பவர்; உன்னின் - ஆலோசித்தால் என்றுமாம், முனிவரின் அருளைப் பெற்றதால் என்னினும் பேறு பெற்றவர் யாருமில்லை என்றான், தற்புகழ்ச்சியன்று. 30 |