2662. | மறைவலான் எதிர், வள்ளலும் கூறுவான்: 'இறைவ! நின் அருள் எத் தவத்திற்கு எளிது? அறைவது ஈண்டு ஒன்று; அகத்தியற் காண்பது ஓர் குறை கிடந்தது, இனி' எனக் கூறினான். |
வள்ளலும் மறைவலான் எதிர் கூறுவான் - இராமனும் வேதங்களில் வல்லவராம்சுதீக்கணர் முன் பின்வருமாறு சொல்வான்; இறைவ நின் அருள் எத்தவத்திற்கு எளிது - தலைவரே! உன் கருணை எத்தகைய தவத்தினால் பெறக்கூடிய எளிமை உடையது?; அறைவது ஈண்டு ஒன்று -நான் தெரிவிப்பது இங்கு ஒன்றுள்ளது (யாதெனில்); இனி அகத்தியற் காண்பது ஓர் குறைகிடந்தது எனக் கூறினான்- இப்பொழுது அகத்திய முனிவரைச் சென்று தரிசிப்பது என்ற ஒருமனக்குறை உள்ளது என்று சொன்னான். 'உம் அருளே எத் தவத்தாலும் அடைதற்கு எளிதன்று. அதனை உம்மால் நான் எளிதில்அடைந்தேன்' என்று கூறினான் இராமன். வான்மீகத்தில் இராமன் 'என் முயற்சியாலேயேதவப்பயனைப் பெற விரும்புகிறேன் என்ற கருத்தைக் கொண்டே 'நின் தவம் எத்தவத்திற்கு எளிது'எனக் கூறியதாகவும் கொள்வர். குறை - இன்றியமையாதது. நிறைவுறாதது. 32 |