2664.'அன்றியும் நின்
     வரவினை ஆதரித்து,
இன்றுகாறும் நின்று
     ஏமுறுமால்; அவற்
சென்று சேருதி;
     சேருதல், செவ்வியோய்!
நன்று தேவர்க்கும்; யாவர்க்கும்
     நன்று' எனா,

    அன்றியும் நின் வரவினை ஆதரித்து - அல்லாமலும் உன்னுடைய
வருகையை விரும்பி; இன்று காறும் நின்று ஏமுறுமால் - இன்று
வரையிலும் எதிர்பார்த்து இருந்து மகிழ்ச்சி அடைவார் ஆதலால்; அவற்
சென்று சேருதி -
நீ போய் அகத்தியரை அடைவாயாக; செவ்வியோய்
சேருதல் தேவர்க்கும் நன்று -
சிறந்தவனே! அகத்தியரை அடைதல்
விண்ணவர்க்கும் நல்லதே; யாவர்க்கும் நன்று எனா - மற்றெல்லார்க்கும்
நல்லதே ஆகும் என்று கூறி,

     இராமனின் வரவு இராவணாதிகளை அழித்து யாவர்க்கும் நன்மை
புரியும் என மகிழ்வுற்றார்.அரக்கரின் அழிவுக்கு உதவும் கருவிகளை
இராமன் பெற வருவான் என எண்ணிய மகிழ்ச்சியுமாம்.செவ்வியோய் -
அழகுடையோய் என்றுமாம். ஏமுறல் - ஏக்கமடைதல் என்று பொருள் கூறி
இராமன்எப்போது வருவான் என எதிர் பார்த்து ஏங்கினார் என்றும்
உரைப்பர். முன்னுள்ள பாடலில்(2663) கூறிய 'நல்லதே நினைந்தாய்'
என்றதனை மேலும் விரித்துக்கூறியதாம்.                           34