இராமன் அகத்தியனைச் சேர்தல்

2665.வழியும் கூறி, வரம்பு
     அகல் ஆசிகள்
மொழியும் மா தவன் மொய்ம்
     மலர்த் தாள் தொழா,
பிழியும் தேனின்
     பிறங்கு அருவித் திரள்
பொழியும் சோலை
     விரைவினில் போயினார்.

    வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள் மொழியும் மாதவன் மொய்ம்
மலர்த்தாள் தொழா -
அகத்தியர் ஆச்சிரமத்திற்குச் செல்லும் வழியை
விளக்கமாகச் சொல்லி எல்லையற்ற ஆசிமொழிகளைக் கூறும் பெருந்
தவத்தோனாம் சுதீக்கணரின் வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்போன்ற
திருவடிகளை வணங்கி; பிழியும் தேனின் பிறங்கு அருவித்திரள் -
அடையிலிருந்துபிழியப்படும் தேன் ஒழுக்குப் போன்று விளங்கிய அருவித்
தொகுதிகள்; பொழியும் சோலைவிரைவினில் போயினார் - நீரைச்
சொரியும் தவச் சாலையிலிருந்து (இராமன் முதலோர்)விரைவாகச் சென்றனர்.

     தேனின் பிறங்கு அருவித்திரள் என்பதைத் தேனே அருவியாக
விளங்கும் மலர்வனம் எனக்கூறுவர். அங்குள்ள அருவிகளில் தேன்
பெருக்கு இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் என்பர்.சுதீக்கணரின் சோலை
பல்வேறு இனிய பழங்களையும் மலர்களையும் செடி, கொடிகளையும்
கொண்டது எனவான்மீகம் கூறும். இச்சோலையை அகத்தியர் சோலை
எனவும் கூறுவர். செல்லும் வழியில்அகத்தியரின் உடன்பிறப்பாம் சுதர்சன
முனிவர் தவவனம் உள்ளது. அதற்குத் தெற்கே அகத்தியர்ஆச்சிரமம்
உள்ளது எனச் சுதீக்கணர் இராமனிடம் கூறியதாகவும் வழியில் சுதர்சனரை
இராமன்முதலியோர் பணிந்து சென்றதாகவும் முதனூல் கூறும்.          35