அகத்தியன் பெருமை 2667. | பண்டு, 'அவுணர் மூழ்கினர்; படார்கள்' என வானோர், 'எண் தவ! எமக்கு அருள்க' எனக் குறையிரப்பக் கண்டு, ஒரு கை வாரினன் முகந்து, கடல் எல்லாம் உண்டு, அவர்கள் பின், 'உமிழ்க' என்றலும், உமிழ்ந்தான். |
(அவ்வகத்தியர்) வானோர் பண்டு அவுணர் மூழ்கினர் படார்கள் என - தேவர்கள் முன்னொருகாலத்தில் 'அசுரர்கள் கடலில் மூழ்கி ஒளிந்து கொண்டனர். ஆதலால் அவர்கள் இனி அழியமாட்டார்கள் எனக் கருதி; எண்தவ எமக்கு அருள்க எனக் குறையிரப்ப - மதிக்கத் தக்கதவம் செய்த முனிவனே! எங்களுக்கு அருள்புரிவீராக' எனத்தம் குறையைச் சொல்லிக் கெஞ்சிக்கேட்க; கண்டு கடலெல்லாம் ஒரு கைவாரினன் முகந்து உண்டு - அவர்கள் படும் துன்பத்தைஅறிந்து ஏழுகடல்களிலுள்ள நீரை எல்லாம் ஒரு கையால் அள்ளி எடுத்துப் பருகி; பின் அவர்கள் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் - பிறகு அவ்வானோர் 'அக் கடல் நீரை உமிழ்ந்தருள்க'என்று வேண்டியதும் மீண்டும் உமிழ்ந்து அக்கடல்களை நீரால் நிரப்பினான். தேவர்களின் பகைவரான விருத்திராசுரன் முதலிய அரக்கர்கள் கடலில் ஒளிந்து கொள்ளஇந்திரன் முதலியோர் அகத்தியரை அடைந்து தம்மைக் காக்க வேண்டினர். அவர் கடல் நீரைக்குடித்ததும் அவ்வரக்கர்கள் வெளிப்பட இந்திரன் அவர்களை அழித்தான். பின் தேவர்கள்விருப்பப்படி தாம் பருகிய நீரை உமிழ்ந்து கடல்களை மீண்டும் நிரப்பினார். முன்னர் அரக்கர்களை அழிக்கத் தம் செயலால் உதவிய அகத்தியர் இப்போது இராமனுக்குப் படைக்கல முதவிஅரக்கர்களை அழிக்க உதவப் போகிறார் என்ற குறிப்புப் புலனாகிறது. 37 |