2668.தூய கடல் நீர் அடிசில் உண்டு,
     அது துரந்தான்;
ஆய அதனால் அமரும் மெய்
     உடையன் அன்னான்;
மாய-வினை வாள் அவுணன்
     வாதவிதன் வன்மைக்
காயம் இனிது உண்டு, உலகின்
     ஆர் இடர்களைந்தான்.

    தூய கடல் நீர் அடிசில் உண்டு அது துரந்தான் - தூய்மையான
கடல்களின் நீர் முழுவதையும் உணவாக உண்டு அதனை மீண்டும் உமிழ்ந்த
முனிவரும்; ஆயஅதனால் அமரும் மெய் உடையன் அன்னான் -
அப்படிப்பட்ட செயலால் குறுகியது எனினும்விரும்பத்தக்க உடலை உடைய
குறுமுனி என அத்தகையோரும்; மாய வினை வாள் அவுணன் வாதவி
தன்வன்மைக் காயம் இனிது உண்டு -
வஞ்சகச் செயல்களையுடைய
வாட்படையுடைய அரக்கனாம் வாதாபிஎன்பவனின் வலிய உடலை மகிழ்ந்து
உண்டு; உலகின் ஆர் இடர் களைந்தான் - உலகமக்களின் கொடிய
துன்பத்தைப் போக்கியவரும் ஆவார்.

     அகத்தியர் கடல்நீரை உண்ட செய்தி மீண்டும் உரைக்கப் பெறுகிறது.
இதனால் முனிவரின்செயற்கரும் செயல் நினைவூட்டப் பெறுகிறது. வாள்
அவுணன் - வாள் போல் கொடுந்தொழில் புரியும்அசுரன். வாதவி - வாதாபி
என்ற வட சொல்லின் தமிழாக்கம்.

வாதாபி வரலாறு

     இல்வலன் வாதாபி என்ற இரு அசுரர்களாம் உடன்பிறந்தோர்,
முனிவர்களையும் அந்தணர்களையும்சிரார்த்தம் என வரவழைத்து ஆட்டின்
உருவு கொண்ட தன் தம்பி வாதாபியை இல்வலன் சமைத்துவிருந்திடுவார்.
அவர்கள் அதனை உண்டபின் 'வாதாபி வெளியேவா' என இல்வலன்
அழைத்ததும் தன்னைஉண் டவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உயிரோடு
வாதாபி வெளியே வருவான். பின் இருவரும்இறந்த விருந்தினரின் ஊனை
உண்டு மகிழ்வர். இவ்வாறு பல அந்தணர்களையும் முனிவர்களையும்
அவர்கள் உண்டு வரும் காலத்தில் அங்கு வந்த அகத்தியர்க்கும் அவ்வாறே
விருந்திட்டழைத்தபோதுமுனிவர் தம் தவ வலிமையால் அவனைத் தம்
வயிற்றிலேயே செரிக்குமாறு செய்தார். அது கண்டுதம்மை அழிக்க வந்த
இல்வலனையும் அழித்தார்.                                     38