2669. | யோகமுறு பேர் உயிர்கள்தாம், உலைவுறாமல் ஏகு நெறி யாது?' என, மிதித்து அடியின் ஏறி; மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய் நாகம்அது நாகம் உற, நாகம் என நின்றான். |
யோகமுறு பேர்உயிர்கள் தாம் - யோக மார்க்கத்தில் நிலை நிற்கும் பெரும் - முனிவர்கள் தாம்; உலைவுறாமல் ஏகு நெறியாதுஎன - துன்பம் அடையாமல் (இவ்விந்த மலையைக்) கடந்து போகும் வழி எது என்று (தேவர்கள்) அந்த அகத்தியரைக்கேட்க; அடியின் மிதித்து ஏறி - தம் காலடியால் மிதித்து அம்மலை மேல் ஏறி; மேகநெடுமாலை தவழ் விந்தம் எனும் - பெரிய மேகங்கள் நீண்ட வரிசையில் படிந்துள்ள விந்தியமலை எனப்படும்; விண் தோய் நாகம் அது - வானம் அளாவி உயர்ந்த மலையானது; நாகம்உற - பாதாள உலகைச் சென்றடையும்படி ஆழ்ந்து போக; நாகம் என நின்றான் - ஒருயானை போலப் பெருமிதத்துடன் நின்றான். யோகமுறு பேர் உயிர் என்பதற்கு முயற்சியை மேற்கொண்டு வாழும் பெரும் கணக்கில் உள்ளஉயிர்கள் என்பர். நாகம் - பல பொருள் குறித்த ஒரு சொல். விசுவாமித்திரர் விருப்பப்படிஇராமன் சீதையை மணக்க வேண்டி வில்லை ஒடிக்க எழுந்து சென்ற போது 'நாகமும் நாகமும் நாணநடந்தான்' (697) என்ற அடியையும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இது சொல் பின் வருநிலை அணி. அகத்தியர் விந்தம் அடக்கிய வரலாறு: விந்திய மலை மற்றெல்லா மலைகளிலும் தான் உயரக் கருதி வானளாவி உயர்ந்தது. அதனால்கதிரவன், மதி, விண்மீன்கள் ஆகியவை வானில் செல்லும் வழி தடுக்கப் பெற்றது. அது கண்டுதேவரும் முனிவரும் அகத்தியரை விந்தியமலையை அடக்குமாறு வேண்டினர். அவர் அம் மலையிடம் தான்வடக்கேயிருந்து தென் திசைக்குச் சென்று மீளும் அளவு அவ்வாறே குறுகிக் கிடக்கக் கூறிச்சென்றார். அதுமுதல் அதன் வளர்ச்சி குன்றியது என்பது புராண வரலாறு. 39 |