2670. | மூசு அரவு சூடு முதலோன், உரையின், 'மூவா மாசு இல் தவ! ஏகு' எனவடாது திசை மேல்நாள் நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா, ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். |
மேல்நாள் வடாது திசை நீசம் உற - முன்னொரு காலத்தில் வடக்குத் திசை கீழே தாழ்ந்து போக; மூசு அரவு சூடு முதலோன் - நெருக்கமாகப் பல பாம்புகளை அணிகலன்களாகத் தரித்த சிவபெருமான்; மூவா மாசு இல் தவ - முதிர்ந்தும் தளராத குற்றமில்லாத தவத்தை உடைய அகத்தியனே!; ஏகு என - நீ தென்திசைக்குச் செல்வாயாக என்று கூற; உரையின் - அக்கட்டளைப்படி; வானின் நெடுமாமலயம் நேரா - விண்ணளவு உயர்ந்த நீண்ட பெரிய மலயமலையை அடைந்து; ஈசன் நிகர் ஆய்உலகு சீர் பெற இருந்தான் - சிவபெருமானுக்கு ஒப்பாக உலகம் தாழாது சமனிலை அடைய அங்குத்தங்கியிருந்தான். மூசு - வலிய, கொடிய எனலுமாம். வடாது - மரூஉ மொழி, நீசம் - தாழ்வு நீசம் எனும்நிலைகள் கிரககதிகள் குறித்துச் சோதிட நூல்கள் கூறும். மாமலயம் இமயமலைக்கு நிகராகவும்,அகத்தியர் சிவபெருமானுக்குச் சமமாகவும் கூறியது புராண வரலாற்றைச் சுட்டும். அகத்தியர் மலையம் சென்ற வரலாறு உமையவள் திருமண காலத்தில் இமயத்தில் சிவன் முதலியோர் யாவரும் கூடியிருந்ததால் வடதிசைதாழத் தென் திசை உயர்ந்தது. அது கண்டு சிவபெருமான் அகத்தியரை நோக்கித் தெற்கே சென்று இருதிசைகளையும் சமனுறச் செய்யுமாறு கூறினார். அகத்தியரும் தெற்கே மலைய மலையில் வீற்றிருக்கஇறு திசையும் சமன் ஆயின. 40 |