அகத்தியன், இராமனை வரவேற்று, அளவளாவல்

2672."விண்ணினில், நிலத்தினில்,
     விகற்ப உலகில், பேர்
எண்ணினில், இருக்கினில்,
     இருக்கும்" என யாரும்
உள் நினை கருத்தினை, உறப்
     பெறுவெனால், என்
கண்ணினில்' எனக் கொடு
     களிப்புறு மனத்தான்.

    (அத்தகைய அகத்தியர்) விண்ணினில் நிலத்தினில் விகற்ப உலகில்
பேர் எண்ணினில்இருக்கினில் இருக்கும் என -
தேவருலகிலும்,
பூவுலகிலும் மற்றும் பல உலகங்களிலும்வேதங்களிலும் உள்ளதாகும் என்று;
யாரும் உள்நினை கருத்தினை என் கண்ணினில் உறப்பெறு வென்-
யாவரும் மனத்தினுள்ளே நினைக்கப் பெறும் பொருளை (இராமன்) எனது
கண்களால் இன்று காணப்பெறுவேன்; எனக் கொடு களிப்புறுமனத்தான் -
என்று எண்ணி மகிழ்ச்சி அடையும் மனத்தைஉடையவன் ஆனான்; ஆல் -
வியப்பிடைச் சொல்.

     விகற்ப உலகு என்றது. அதலம் முதலிய பல்வேறு உலகங்களை.
எல்லாப் பொருள்களிலும் கரந்துஉறைவதாலும் நினைவார் உளத்தில் அவர்
நினையும் வடிவில் விரைந்து சேர்வதாலும் எல்லா மறைகளும்தெரிவிக்கும்
பொருள் ஆதலாலும் இவ்வாறு கூறினார். எல்லா உலகங்களிலும் கலந்து
விளங்கும் பரம்பொருளாம் இராமனைக் கண்ணால் காணும் பேறு பெற்றதால்
அகத்தியர் களிப்புறு மனத்தராய்இருந்தார். கருத்து - பேரறிவாகிய இராமன்
என்பர்.                                                      42