2673. | 'இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும் நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு அரைத்தும், அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று உரைக்கு உதவுமால்' எனும் உணர்ச்சியின் உவப்பான். |
(மேலும் அகத்தியர்) இரைத்த மறை நாலினொடு இயைந்த பிறயாவும் - பேரொலி கொண்டுஒலிக்கும் நான்கு வேதங்களோடு பொருந்திய பிற சாத்திர நூல்களையும்; நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு அரைத்தும் -முறையே பயின்ற சிறந்த அறிவாகிய உயர்ந்த அம்மியில் பலநாள் இட்டு அரைத்துஆராய்ந்தும்; அயனாலும் அறியாத பொருள் நேர்நின்று உரைக்கு உதவும் - பிரமனாலும் அதன்சிறப்பைக் கண்டறிய முடியாத அப்பரம் பொருள் எதிரில் நின்று உரையாடற்கு அருள் செய்யும்; எனும் உணர்ச்சியின் உவப்பான் - என்கின்ற அறிவால் களிப்பவரானார்; ஆல் - அசை. பிரமன் முதலியவர்களும் வேதம் முதலிய நூல்களும் அறிதற்கு முடியாத பரம்பொருள் கண்முன்நின்று பேசுதற்குரிய நற்பேறு வாய்த்ததே என்ற உணர்ச்சியால் அகத்தியர் மனத்தில் மகிழ்ச்சிபொங்கியது. இயைந்த பிற என்பவை அவ் வேதங்களின் பொருளை நன்கறிய உதவும் கருவி நூல்களானமீமாம்சை, புராணம், நியாயம், தருமசாஸ்திரம் முதலியவை. மறை முதலிய நூல்களாம் அம்மியைக்கொண்டு தன் ஞானமாம் கல்லில் இட்டு அரைத்து என்றும் உருவகம் செய்வர். உரைக்குதவும் எனக்கொண்டு தொடுத்தலைக் குறிப்பர். 43 |