2675. | 'ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து ஊன் நுகர் அரக்கர் உருமைச் சுடு சினத்தின் கான அனலைக் கடிது அவித்து, உலகு அளிப்பான், வான மழை வந்தது' என, முந்துறு மனத்தான். |
(பின்னும் அகத்திய முனிவர்) ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து - மற்றைஉயிர்களாகிய மரங்கள் எல்லாவற்றையும் தமக்கு உணவு வேண்டும் பொழுதெல்லாம் வேகவைத்து; ஊன் நுகர் அரக்கர் - (அவற்றின்) உடலை உண்ணும் இராக்கதர்; உருமைச் சுடு சினத்தின்- இடியையும் சுடுகின்ற கோபமாகிய; கான அனலைக் கடிது அவித்து - காட்டுத் தீயைவிரைவாக அழித்து; உலகு அளிப்பான் வானமழை வந்தது - உயிர்களைக் காப்பதற்குவிண்ணில் தோன்றும் மேகத்திலிருந்து மழை வந்தது; என முந்துறு மனத்தான் - என்று(இராமனைக்காண) முற்படுகின்ற மனத்தை உடையவன். ஏனைய உயிர் - அரக்கர் ஒழிந்த பிற உயிர்கள். ஊன் - ஆகுபெயராய் உடலுக்காகி வந்தது.அரக்கர்க்குத் தாக்கி எரிக்கும் இடியோடு கூடிய தீ உவமை. இராமனுக்குத் தீயை அவிக்கும் வானமழை உவமை. இலக்குவன் நாண் ஒலி கேட்டு இராமன் 'வீறாக்கிய பொற்கலன் வில்லிட ஆரம்மின்னமாறாத் தலைச் சொல் மாரி வழங்கி வந்தான் கால் தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்றுபொங்கும் ஆறாக் கனல் ஆற்றும் ஓர் அஞ்சன மேகம் என்ன' (1726) வந்ததைக் கூறும் பாடலுடன்ஒப்பிடத்தக்கது. இது உருவக அணி. 45 |