2676.கண்டனன் இராமனை வர;
     கருணை கூர,
புண்டரிக வாள் நயனம் நீர்
     பொழிய, நின்றான்-
எண் திசையும் ஏழ் உலகும்
     எவ் உயிரும் உய்ய,
குண்டிகையினில், பொரு இல்,
     காவிரி கொணர்ந்தான்.

     எண்திசையும் ஏழ்உலகும் எவ் உயிரும் உய்ய - எட்டுத்
திக்குகளும் ஏழு உலகங்களும் எல்லா உயிரினங்களும் நற்கதி
அடைவதற்காக; குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் -
தமது கமண்டலத்தில் ஒப்பற்ற காவிரி ஆற்றினைக் கொண்டு வந்த
அகத்தியர்; இராமனை வரக் கண்டனன் -
இராமனைத் தம்மிடம் நாடி
வரக் கண்டு; புண்டரிக வாள் நயனம் கருணை கூர நீர் பொழிய
நின்றான் -
தாமரை போன்ற ஒளி பொருந்திய கண்களிலிருந்து இன்பக்
கண்ணீர் சொரிய நின்றார்.

     கூர-அதிகரிக்க. கருணை கூர என்பதனைக் கண்டனன் என்பதோடும்
கூட்டலாம். குண்டிகை - தவசியர்க்குரிய வாய் குறுகிய சிறிய நீர்க்குடம்.
பொருவில் காவிரி - கங்கை முதலிய பிற புண்ணிய நதிகளும் இதில் படிந்து
தம் பாவத்தைப் போக்கிக் கொள்ளும் தூய்மை வாய்ந்ததால் ஒப்பில்லாதது
ஆயிற்று. 'கங்கையிற் புனிதமாகிய காவிரி' என்றார் பிறகும் (தொண்டரடிப்
பொடியாழ்வார் திருமாலை. 23) பின்னரும் 'தெய்வப் பொன்னி' என
இப்படலமும் கூறும் (2688).                                      46