2677. | நின்றவனை, வந்த நெடியோன் அடி பணிந்தான்; அன்று, அவனும் அன்பொடு தழீஇ, அழுத கண்ணால், 'நன்று வரவு' என்று, பல நல் உரை பகர்ந்தான்- என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான். |
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான் - (அங்ஙனம் நின்ற) அகத்தியரை அங்கே வந்த இராமன் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான்;அன்று - அப்பொழுது; என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் - எக்காலத்தும் உள்ளதாகிய இனிய தமிழின் இலக்கணங்களைக் கூறிப்புகழ் பெற்ற அகத்தியராகிய;அவனும் - அம்முனிவரும்; அழுத கண்ணால் அன்பொடு தழீஇ - அப்பொழுது அம்முனிவரும் இன்பக் கண்ணீர் விட்டவராய் அன்பினால் தழுவிக் கொண்டு; வரவு நன்று என்று பல நல்உரை பகர்ந்தான் - உங்கள் வருகை நன்றாயிருந்தது என்ற பல நல்ல சொற்களை இனிதாகச் சொன்னார். குறுமுனியாம் அகத்தியர் முன் நெடியோனாம் இராமன் வந்து வணங்கினான். மாவலியிடத்து உலகனைத்தும் அளக்க எடுத்த திரிவிக்கிரமனை இது நினைவூட்டும். பண்பு நலன்களால் யாவரினும் உயர்ந்தோன் என்றுமாம். தமிழ் மொழி என்றுமுள்ளது என்பதைச் சுட்டியதால் முன்னரே இருந்த மொழிக்கு அகத்தியர் இலக்கணம் அமைத்தார் என்ற வரலாறு இத்தொடரால் புலப்படும். தென்தமிழ் தென்னாட்டில் வழங்கிய தமிழ் என்றுமாம். 47 |