2679. | பொருந்த, அமலன் பொழிலகத்து இனிது புக்கான்; விருந்து அவன் அமைத்தபின், விரும்பினன்; 'விரும்பி, இருந் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து, என் அருந் தவம் முடித்தனை; அருட்கு அரச!' என்றான். |
அமலன் பொழிலகத்து(ப்) பொருந்த இனிது புக்கான் - இராமன் சோலைக்குள் மனம் ஏற்றிட இனிமையாய்ப் புகுந்தவனாய்; அவன் விருந்து அமைத்தபின் விரும்பினன் - அம்முனிவர் விருந்திட்டு உபசரித்த பின் மகிழ்ந்திருந்தான்; விரும்பி(அப்போது அகத்தியர்) மகிழ்ந்து (இராமனைப்பார்த்து); அருட்கு அரச - கருணைக்குத் தலைவனே!; இருநீதவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து மிக்க தவத்தைச் செய்த என்னுடைய வீட்டில் எழுந்தருளி; என் அருந்தவம் முடித்தனை என்றான் - என்னுடைய அரிய தவத்தை நிறைவேற்றினாய் என்று கூறினார். இராமனை நோக்கி 'நீ இவ்வாறு எழுந்தருளியது' 'நான் முற்பிறவிகளிலும் இப்பிறவியிலும் செய்த நற்றவத்தால்' என்றும் 'நான் செய்யும் தவம் உன் வருகையால் இப்போது முற்றுப் பெற்றது' என்றும் கூறினார். இனி விரும்பினனாகிப் புக்கான் எனவுமாம். இராமன் பேரருள் கொண்டு தம் தவச்சாலைக்கு வந்ததால் 'அருட்கரசு' என்றார். இராமன் வருகையே பெரும் பேறு; இனிச் செய்யும் தவம் வேறு இல்லை என்பது புலப்பட 'அருந்தவம் முடித்தனை' என்றார். பெரியோர் தம் விருந்திடம் இவ்வாறு கூறி அவர் தம் பெருமையை உணர்த்தித் தம் அன்பின் பெருக்கையும் வெளிப்படுத்துவர். விருந்து - புதுமை; புதிதாய் வந்தவர்க்குச் செய்யும் உபசாரத்துக்கு ஆம். இருமடியாகுபெயர். 49 |