268.வெருட்டி எழும் கண பணப்பை வியாளம்
     எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்;
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம்
     எலாம் கதை என்னும் மாது தந்தாள்;
அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி,
     உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்;
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள், செலசரம்
     ஆகிய பலவும், தெரிக்குங்காலை.

     கண பணப் பை வியாளம் - கூட்டமாயுள்ள படமும்
நச்சுப்பையும் கொண்ட பாம்புகள் (பல தலைகள் கொண்ட
பாம்புகளைக் குறித்தது); மருள் - அச்சம்; புயங்கம் - பாம்பு;
செலசரம் - நீரில் இயங்கும் உயிரினங்கள்.24-4