2681. | ' "தண்டக வனத்து உறைதி" என்று உரைதரக் கொண்டு, உண்டு வரவு இத் திசை என, பெரிது உவந்தேன்; எண் தகு குணத்தினை;' எனக் கொடு, உயர் சென்னித் துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும்: |
உயர் சென்னித் துண்டமதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும்- தன் உயர்ந்த தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமானைப் போன்ற அகத்திய முனிவர் சொல்வாரானார்; எண்தகு குணத்தினை - யாவரும் மதிக்கத்தக்க நற்பண்புகளுடைய இராமனே! ; தண்டக வனத்து உறைதி என்று உரைதரக் கொண்டு - தண்டகாரணியத்தில் நீ எழுந்தருளியிருக்கிறாய் என (இங்கு வரும் முனிவர்கள்) கூறிய சொல்லைக் கேட்டு; இத்திசை உண்டு வரவு எனக் கொடு - இத்திசைக்கு உனது வருகை உண்டு என்று கொண்டு; பெரிது உவந்தேன் - மிக மகிழ்ந்திருந்தேன்; என - அசை. எண் தகு குணத்தினை - எட்டு மேலான பண்புகளைக் குறிக்கும் என்பர். (குறள். 9) துண்டமதி - மதித்துண்டு, இளம்பிறை மதி. அகத்தியரைச் சிவபிரானுக்கு ஒப்பிடல் முன்னர்க் காணப்படுகிறது. 'ஈசன் நிகர் ஆய்' (2670); உண்டு வரவு எனக் கருதியதை ஒட்டி இராமன் எழுந்தருளியமை குறிப்பால் பெறப்படும். 51 |