2682.'ஈண்டு உறைதி, ஐய! இனி,
     இவ் வயின் இருந்தால்,
வேண்டியன மா தவம்
     விரும்பினை முடிப்பாய்;
தூண்டு சின வாள் நிருதர்
     தோன்றியுளர் என்றால்,
மாண்டு உக மலைந்து, எமர்மனத்
     துயர் துடைப்பாய்;

    ஐய! ஈண்டு உறைதி - ஐயனே! இங்கு நீ தங்கி இருப்பாயாக; இனி
இவ்வயின் இருந்தால் -
இனிமேல் இவ்விடத்தில் நீ இருந்தால்,
வேண்டியன மாதவம் விரும்பினை முடிப்பாய் - நீ விரும்பிய பெரிய
தவங்களை விரும்பியவாறே செய்து முடிப்பாய்; தூண்டுசின வாள் நிருதர்
தோன்றியுளர் என்றால் -
தூண்டப்பட்ட கோபத்தோடு கூடிய வாளேந்திய
அரக்கர்கள் வந்தனர் என்றால்; மாண்டுஉக, மலைந்து - அவர்கள் அழிந்து
கீழே சிதறப் போர் செய்து; எமர் மனத்துயர் துடைப்பாய் - எம்போன்ற
முனிவர்களின் மனத்துன்பத்தைப் போக்குவாய்.

     வேண்டியன மாதவம் என்பது இராமனின் சிறிய தாய் கைகேயி கூறிய
வண்ணம் ஆகும். தவங்கள் என்பர் (1601). வாள்நிருதர் - வாள்போல்
கொடிய அரக்கர் எனலுமாம். வாள் எனில் கொடுமையும் ஆம். நீ இங்கே

இருந்தால் நீயும் தவம் செய்யலாம். எம்போன்ற முனிவர் தவத்திற்கு
இடையூறு செய்ய வரும் அரக்கர்களை நீ அழிப்பதால் அவர்களும் தவம்
செய்ய இயலும் என அகத்தியர் கூறுவதால் தவச் செயல் கெடாது நிலைபேறு
எய்தலை இராமன் வரவுணர்த்தும்.                                 52