2683. | 'வாழும் மறை; வாழும் மனு நீதி; அறம் வாழும்; தாழும் இமையோர் உயர்வர்; தானவர்கள் தாழ்வார்; ஆழி உழவன் புதல்வ! ஐயம் இலை; மெய்யே; ஏழ் உலகும் வாழும்; இனி, இங்கு உறைதி' என்றான். |
ஆழி உழவன் புதல்வ - ஆணைச் சக்கரத்தை உலகெங்கும் செலுத்தும் தயரதன் மகனே!; இனி மறைவாழும் - (நீ இங்குத் தங்குவதால்) இனி மேல் வேதங்கள் வாழ்வு பெறும்; மனுநீதி வாழும் - மனு தருமசாத்திரமும் வாழும்; அறம் வாழும் - எல்லா வகைத் தருமங்களும் நிலை பெறும்; தாழும் இமையோர் உயர்வர் - அரக்கர் கொடுமையால் தாழ்வுற்ற தேவர்கள் உயர்ந்த நிலை அடைவர்; தானவர்கள் தாழ்வார் - அரக்கர்கள் தாழ்வடைவார்கள்; ஏழ் உலகும் வாழும் - ஏழு உலகங்களும் வாழ்வடையும்; ஐயம் இலை மெய்யே - இதில் சந்தேகம் இல்லை; உண்மையே!; இங்கு உறைதி என்றான் - இவ்விடத்தில் தங்குவாயாக என்று அகத்தியர் கூறினார். வாழும் மறை என்றதால் எக்காலத்தும் அழியாத வேதங்கள் என்பர் சிலர். பதினெட்டு நீதி நூல்களில் தலையாயது மனுநூல் ஆகையால் அதனை எடுத்துரைத்தார். ஆழி உழவன் - ஆணைச் சக்கரமாம் ஏரைக் கொண்டு உலகு முழுவதையும் உழுபவன் எனத் தயரதனின் ஆட்சிப் பெருமை கூறப்பட்டது. தானவர் என்பவர் தனு என்பாளிடம் தோன்றியவர் எனும் பொருளால் அசுரர்களைச் சுட்டும். அசுரர்போல அரக்கர்கள் கொடியவர்கள் எனவே அவரையே சுட்டியது என்பர். 53 |