2684. | 'செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தித் தருக்கு அழிதர, கடிது கொல்வது சமைந்தேன்; வருக்க மறையோய்! அவர் வரும் திசையில் முந்துற்று இருக்கை நலம்; நிற்கு அருள் என்?' என்றனன் இராமன். |
இராமன் (அகத்தியரிடம்) வருக்க மறையோய்! - தொகுதியாகிய வேதங்களை உடையவனே!, செருக்கு அடை அரக்கர் புரிதீமை - ஆணவம் அடைந்த இராக்கதர் செய்யும் கொடுமை எல்லாம், சிதைவு எய்தித் தருக்கு அழிதர(க்)கடிது கொல்வது சமைந்தேன் - அழிவை அடைந்து களிப்பு அழியும்படி விரைவில் கொல்ல ஆயத்தமாக உறுதி பூண்டேன், (ஆகையால்);அவர்வரும் திசையில் முந்துற்று - அவர்கள் வருகின்ற (தென்) திக்கில் முற்படச் சென்று, இருக்கை நலம் - இருப்பது நன்மை தரும், நிற்கு அருள் என் - உம் விருப்பம் யாது, என்றனன் - என்று கேட்டனன். வருக்கமறை என்பது நான்கு வேதங்களையும் அவற்றைச் சார்ந்த அங்கங்கள் பிறவற்றையும் கூறியதாம். அரக்கர்களைக் கொல்வதால் அகத்தியர் ஆச்சிரமத்தின் தூய்மை கெடும். ஆதலால் 'முந்துற்று இருக்கை நலம்' என்றான். செருக் கடை என்று கொண்டு போர்க்களம் எனப் பொருள் கூறுவாருமுளர். 'கொல்வது சமைந்தேன்' என்றது இராமன் முன் தண்டக வன முனிவர்களுக்கு அபயமளித்துறுதி கூறியதை நினைவூட்டும். (2647-2654). 54 |