அகத்தியன் இராமனுக்குப் படைக்கலங்கள் வழங்குதல்

2685. 'விழுமியது சொற்றனை; இவ் வில் இது
     இவண், மேல்நாள்
முழுமுதல்வன் வைத்துளது;
     மூஉலகும், யானும்,
வழிபட இருப்பது; இதுதன்னை
     வடி வாளிக்
குழு, வழு இல் புட்டிலொடு கோடி'
     என, நல்கி,

    (அது கேட்ட அகத்தியன்) விழுமியது சொற்றனை - சிறப்பானவற்றைச்
சொன்னாய்; இவண் இவ்வில் இது - இவ்விடத்திலுள்ள இந்த வில்;
மேல்நாள் முழுமுதல்வன் வைத்துளது -முற்காலத்தில் திருமால்
வைத்திருந்தது; மூ உலகும் யானும் வழிபட இருப்பது - மூன்று
உலகங்களும் நானும் வணங்கிப் பூசை செய்ய இருப்பது; இது தன்னை -
இவ் வில்லை; வடிவாளிக்குழு - கூர்மையான அம்புகளின் கூட்டம், வழு
இல் புட்டிலொடு கோடி -
குற்றமில்லாத அம்புப் புட்டிலொடு
கொள்வாயாக; எனநல்கி - என்று கொடுத்து,

     முழுமுதல்வன் என்பதற்குச் சிவபெருமான் என்பாரும் உளர். ஆயினும்
இவ்வில்லின் வரலாறு பற்றிக் கூறும் போது இதனை விசுவகருமா செய்து
திருமாலிடம் அளித்தான். அது பரசுராமனிடம் வந்து பின்னர் இராமனிடம்
கொடுக்கப்பட்டது. அதனை இராமன் வருணனிடம் கொடுக்க (1307) அவன்
அரக்கர் வதம் குறித்து இராமனிடமே அளிக்குமாறு அகத்தியரிடம்
அளித்தான் என்பர். கரன் வதைப்படலத்தில் 'வில்லை வருணன்
கொடுத்தனன்' என வருவதால் (3052) இப்போது அகத்தியர் அளித்த வில்
வேறு என்பர்.                                                 55